மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ராஜா நகரை சேர்ந்தவர் நாகூர்மீரான் மனைவி ரஹமத், 55; இவர் கடந்த 4ம் தேதி செக்கு மேட்டு தெரு வழியாக வங்கிக்கு நடந்து சென்றார். அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பெண், தனது குழந்தைக்கு உடல் சரியில்லை, மருத்துவ செலவுக்காக தன்னுடைய தங்க காசை, வங்கியில் அடகு வைக்க முடியவில்லை. அவசரமாக பணம் தேவைப்படுவதால் குறைந்த விலைக்கு 10 தங்க காசு தருவதாக கூறி, ரூ.1 லட்சம் பணம் கேட்டார்.இதனை நம்பிய ரஹமத் ரூ.70 ஆயிரத்துக்கு பேரம் பேசி முடித்தார். பின்பு, ரஹமத் அருகில் உள்ள தனியார் நகை அடகு கடைக்கு சென்று தனது 2 சவரன் தங்க செயினை அடகு வைத்து, ரூ.70 ஆயிரம் பணம் பெற்றார். அதனை அடையாளம் தெரியாத பெண்ணிடம் கொடுத்து, 10 தங்க காசுகளை வாங்கி வீட்டிற்கு சென்று பார்த்த போது போலி தங்க காசு என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து ரஹமத் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, நுாதன முறையில் ஏமாற்றிய பெண்ணை தேடி வருகின்றனர்.