உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மறியல்: 365 ஆசிரியர்கள் கைது

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மறியல்: 365 ஆசிரியர்கள் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 365 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்டு அருகே, தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயானந்தம் தலைமை தாங்கினார்.தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் தண்டபாணி, தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர் லுார்து சேவியர் முன்னிலை வகித்தனர்.தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ராஜசேகர் கோரிக்கைகள் குறித்து பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிர்வாகிகள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். உடன், பாதுகாப்பு பணியிலிருந்த விழுப்புரம் தாலுகா போலீசார், மறியல் செய்த 150 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு 15 நிமிடம் வரை போக்குவரத்து பாதித்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தொடக்கப் பள்ளி ஆசிரியர், ஆரம்ப பள்ளி ஆசிரியர், தமிழக ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகளின் மாவட்ட செயலாளர்கள் புஷ்பராஜ், ேஷக் ஜாகீர் உசேன், சூரியகுமார், மனோகரன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு நிர்வாகிகள் ரஹீம், அண்ணாமலை, சம்சுதீன், அசோகன், ஏழுமலை பேசினர்.தொடர்ந்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் லட்சுமிபதி தலைமையில் கச்சேரி சாலையில் காலை 11:05 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மறியலில் ஈடுபட்ட 80 பெண்கள் உட்பட 215 பேரை 11:10 மணிக்கு கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ