மேலும் செய்திகள்
அரசு ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
25-Nov-2025
சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டப் பணிகளை அவசரகதியில் முடித்து அதற்கான நிதியை பெறுவதில் தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டுவதால் பணிகள் தரமற்று இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் அரசு செயல்படுத்தும் பெரும்பாலான திட்டப் பணிகளை ஆளும் தி.மு.க., வினரே டெண்டர் எடுத்து செய்கின்றனர். பெரிய பணிகளை பொறுத்தவரை முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்களின் பினாமி பெயர்களிலும், அவர்களின் ஆதரவு பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் அதிக கமிஷன் பெற்றுக் கொண்டும் பணிகளை செய்ய ஒதுக்கீடு செய்கின்றனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக பணிகளில் இழுபறி ஏற்பட்டு தாமதமானாலும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தனர். தற்போது தேர்தல் நெருங்குவதால் டெண்டர் விடப்பட்ட பணிகளை விரைந்து முடித்து அதற்கான நிதியை முழுவதுமாக பெறுவதற்கு முனைப்பு காட்டுகின்றனர். ஏற்கனவே, மேல்மட்ட நிர்வாகிகள் அதிகாரிகள் என கமிஷன் கொடுத்தது போக மீதமுள்ள தொகைக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவசரகதியில் செய்யப்படும் வேலைகள் தரமின்றி உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதைப்பற்றி கவலைப்படாத ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைவாக முடித்து தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் செய்து முடித்த வேலைக்கான பணத்தை பெறுவதிலேயே குறியாக செயல்படுகின்றனர். இதுவரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசு திட்டப்பணிகள் பல இடங்களில் தரமாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிலரின் சுயநலத்திற்காக தரம் இன்றி மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் தி.மு.க.,விற்கு பாதகத்தை ஏற்படுத்துமோ என உடன்பிறப்புகள் கவலை அடைந்துள்ளனர். தேர்தல் நெருங்கி இத்தருணத்தில் அரசு திட்ட பணிகளை கண்காணித்து அவற்றை தரமாக செய்து முடித்திடவும், தரமின்றி மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உரிய பணத்தை ஒப்பந்ததாரருக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
25-Nov-2025