மழை நீர் வெளியேற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொரசப்பட்டில் மழை நீரைவெளியேற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதனால், பொரசப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகள் மற்றும் கோவில்களில் புகுந்தது. பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் நேற்று மதியம் தேங்கிய மழை நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப்இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் நடத்தினர். ஊராட்சி தலைவர் சாந்தி முனியன் மூலம் ஜே.சி.பி., கொண்டு மழைநீர் வெளியேற வழி ஏற்படுத்தினர். மேலும், ஒரு வார காலத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தருவதாக ஊராட்சி தலைவர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.