தவறான வழிகாட்டி பலகை அகற்றம்
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் ரயில்வே கேட் ஜங்ஷனில் தவறான பெயருடன் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகை குறித்து சர்ச்சை எழுந்ததால் அகற்றப்பட்டது. திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில், அரகண்டநல்லுார் ரயில்வே கேட் ஜங்ஷனில் இருந்து வி.புத்தூர், பரனூர், ஆற்காடு வழியாக, 17 கிலோ மீட்டருக்கு ஆயந்தூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அரகண்டநல்லூர் ரயில்வே கேட் சந்திப்பில் இருந்து, வி.புத்தூர் வரை, 5 கி.மீ., தூரத்திற்கு சமீபத்தில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை, ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொண்டது. போக்குவரத்து முக்கியத்துவம் உள்ள இந்த சாலை, ஒப்பந்தப்படி அகலப்படுத்தி மேம்படுத்தப்படாமல் அவசர அவசரமாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் அரகண்டநல்லுார் ரயில்வே கேட் அருகே வைக்கப்பட்ட ஊர் பெயர் அறிவிப்பு பலகையில் ஆயந்தூர் என்பதற்கு பதிலாக, ஆலந்தூர் என எழுதப்பட்டது. அதேபோல வி.புத்தூர் என்பதற்கு பதிலாக அ.புத்தூர் என எழுதப்பட்டது. குறிப்பாக பரனூர், வீரசோழபுரம் உள்ளிட்ட முக்கியமான கிராமங்களின் பெயர்களும் விடுபட்டது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் அவசர அவசரமாக, வழிகாட்டி பலகையை அகற்றினர். மாற்றாக அங்கு ஏற்கனவே இருந்த வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.