நீர் நிலைகளில் குளிக்க தடை விதித்து உயிரிழப்புகள் தடுக்க கோரிக்கை
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் பருவ மழை துவங்கும் முன் ஆறு, ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் குளிக்க தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் உள்ள ஆறுகளில் மணல், ஏரிகளில் வண்டல் மண் எடுக்கப்பட்டு ஆங்காங்கே மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. பருவ மழையின்போது ஆறுகளில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரிகள் நிரம்பும். அப்போது, சங்கராபுரம் பகுதிகளில் உள்ள ஆறு, ஏரிகளில் பள்ளி மாணவர்கள் சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் குளிக்க செல்வது வழக்கம். மணல் மற்றும் மண் எடுத்து உருவான திடீர் பள்ளத்தில் மாணவர்கள் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதனை தடுக்க ஆறு, ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளில் சிறுவர்கள் குளிக்க தடை விதித்து, அப்பகுதியில் தடை விதிக்கப்பட்டதிற்கான விளம்பர பேனர் வைக்க அந்தந்த ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.