தென்பெண்ணையாற்றில் தொடரும் மணல் கொள்ளை: கூட்டுக்குடிநீர் திட்டம் பாதிக்கும் அபாயம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த முடியனுர் தென்பெண்ணை ஆற்றில் சுடுகாட்டு பாதை அருகே இரவு நேரத்தில் லாரிகளில் தொடரும் மணல் கொள்ளை சம்பவத்தால், கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைபட்டில் துவங்கி கடலுாரில் உள்ள வங்கக்கடல் வரை தென்பெண்ணை ஆற்றில் மணல் மிகுந்த பகுதிகள் உள்ளது. இதனை அரசு மணல் குவாரி என்ற பெயரில் மாபியா கும்பல்கள் சுரண்டிவிட்டனர் . இதனால் தென்பெண்ணை ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்தாண்டு பெய்த பெஞ்சல் புயல் வெள்ளத்தின் காரணமாக மணல் குவிந்து, நிலத்தடி நீரை மே ம்படுத்தும் இயற்கையின் சமநிலைப்பாடு நீடிக்க துவங்கி இருக்கிறது. இந்நிலையில் மணல் மாபியாக்கள் மணலை சுரண்டும் பணியில் களமிறங்கி உள்ளனர். குறிப்பாக முடியனுர் தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஜே.சி.பி., மூலம் லாரிகளில் மணல் கொள்ளை அப்பட்டமாக அரங்கேறி வருகிறது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆற்றின் ஓரம் குடியிருப்போர் வீடு கட்டுவதற்கு சாக்குப் பையில் மணல் எடுத்துச் சென்றால் கண் கொத்தி பாம்பாக கண்காணித்து வழக்குப் பதிந்து கைது செய்யும் திருக்கோவிலுார் போலீசாருக்கு , இது குறித்து முடியனுர் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. மணல் கொள்ளை அரங்கேறும் பகுதியில் முடியனுர் மற்றும் எட்டு கிராம வழியோர குடியிருப்பு கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் இயங்குகிறது. இதன் அருகாமையிலேயே பள்ளம் தோண்டி மணல் கொள்ளை சம்பவம் நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இரவு பகலாக ரோந்து பணியை தீவிரப்படுத்தி இருக்கும் போலீசாரின் கண்ணில் கனிம கொள்ளை சிக்கவில்லையா? அல்லது கண்டும் காணாமல் ஒதுங்கி நிற்கிறார்களா? என்ற கேள் வி எழுந்துள்ளது. கனிமவளத்துறை அதிகாரிகள் ஒரு சில மணல் லாரிகளை மட்டும் குறி வைத்து பிடிக்கும் நிலையில், இத்தகவல் அவர்களுக்கு செல்ல வில்லையா? கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர்கள் மூலமாக கிராமத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் வருவாய்த்துறை வட் டாட்சியர்களின் செவிக்கு இச்சம்பவம் செல்லவில்லையா? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைக்கின்றனர் கிராம மக்கள். இதற்கெல்லாம் மாவட்ட நிர்வாகம் தான் பதில் சொல்ல வேண்டும்.