கல்வராயன்மலையில் பள்ளி வாகனங்கள் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
கள்ளக்குறிச்சி; கல்வராயன்மலையில் அரசு சார்பில் 6 பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியின் பயன்பாட்டிற்கு 6 பள்ளி வாகனங்ள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் மற்றும் அவசர கால நடமாடும் மருத்துவ சிகிச்சை ஊர்தி சேவை துவக்க விழா நடந்தது. கலெக்டர் பிரசாந்த், உதயசூரியன் எம்.எல்.ஏ., வாகனங்கள் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது; பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர கால நடமாடும் மருத்துவ சேவை ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சென்னையில் முதல்வர் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்வராயன்மலைப்பகுதியில் இன்னாடு, கொட்டப்புத்துார், சேராப்பட்டு, மட்டப்பட்டு, வஞ்சிக்குழி, மணியார்பாளையம் கிராமங்களில் செயல்படும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்கப்பள்ளிகளுக்கு 6 பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும அவசர கால நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் செவிலியர்கள், லேப் டெக்னிஷியன்கள் கல்வராயன்மலைப் பகுதியில் தினந்தோறும் கால அட்டவணைப்படி கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். எனவே மலை கிராம மக்கள் இச்சேவைகளை முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். பழங்குடியினர் நல அலுவலர் அம்பேத்கர், கல்வராயன்மலை ஒன்றிய சேர்மன் சந்திரன், ஒன்றிய துணை சேர்மன் பாச்சாபீ உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.