சுய உதவிக்குழு பெண்கள் வங்கிக் கடன் பெற அழைப்பு
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் தொழில் துவங்கிட வங்கிக் கடன் பெறலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் குழுவிலிருந்து சிறிய அளவிலான கடன்களை பெற்று பண்ணை மற்றும் பண்ணை சாராத துறைகளில் நிறுவனங்களை உருவாக்குகின்றனர். அந்த நிறுவனங்கள் வளரும்போது வங்கிக் கடன் பெறுவது கடினமாக உள்ளது. இதனை எளிதாக்கும் வகையில், சுய உதவிக் குழு பெண் உறுப்பினர்களில் ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள் மற்றும் புதிதாக தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தொழில் மேம்படுத்திட, சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் வங்கிகள் மூலம் கடன் பெறலாம். இதற்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் வங்கிக் கடன் பெற தகுதிகளாக, சுய உதவிக் குழுவில் குறைந்த பட்சம், 2 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். முதல் வங்கிக் கடன் பெற்று 2 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். முதல் கடனை, முறையாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். 21 முதல் 60 வயதிற்குள் இருக்கவேண்டும். மொத்த கடன் தொகையில் ரூ.1.5 லட்சம் வரை 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். மேலும் தொழில் திட்டம் மற்றும் வங்கியில் கோரும் ஆவணங்களை வழங்கிட வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தைச் சார்ந்த வட்டார அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.