வீடு, அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பது... எப்போது; பருவமழைக்கு முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் வீடுகள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஏரிகள் விவசாயத்திற்கு, குடிநீருக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை மழை, தென்மேற்கு பருவமழை குறைந்து, வடகிழக்கு பருவமழை மட்டுமே ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால், கனமழை பெய்தாலும் நீண்ட நாட்களுக்கு ஏரிகளில் தண்ணீர் தேங்குவதில்லை. ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறை வதால், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு வராமல் இருக்க இயற்கை வழங்கும் மழை நீரை சேமிப்பது மட்டும் தான் ஒரே தீர்வாகும். இதை கருத்தில் கொண்டு கடந்த 2005ம் ஆண்டு அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்களில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதாவது, கட்டடத்தின் மொட்டை மாடியில் விழும் மழைநீர், பைப் வழியாக நிலத்தடியில் இணைக்கப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் மழை நீர் வீணாகாமல் நிலத்தடிக்குள் சென்றது. இதன் மூலம் பெரும்பாலான இடங்களில் பயன்பாடின்றி இருந்த போர்வெல்களில் தண்ணீர் சுரந்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. குறிப்பாக, புதிதாக வீடு மற்றும் வணிக வளாகம் கட்டுபவர்கள் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே கட்டட அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டது. இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றாலும் முறையான கண்காணிப்பு இல்லாததால் தற்போது பொலிவிழந்துள்ளது. மழை நீர் சேகரிப்பு என்ற அமைப்பு, வீட்டின் திட்ட அனுமதியில் மட்டுமே உள்ளது. பெரும்பாலானோர் அதனை அமைப்பது கிடையாது. மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரசு அலுவலகங்களிலும், மழை நீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்ட பைப்கள் உடைந்தும், தொட்டிகள் சேதமடைந்தும் கிடக்கிறது. மழைநீர் சேகரிப்பு குழிகளில் குப்பை கழிவுகள் நிறைந்து, செடி, மரங்கள் முளைத்துள்ளன. மழைநீர் தொட்டியில் வந்து விழுந்தாலும் நிலத்தடிக்குள் சென்று சேர முடியாத நிலை தான் உள்ளது. எனவே, மழைநீர் சேமிப்பதன் அவசியத்தை உணர்ந்து வீடுகள், அரசு அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடுகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் ஊக்குவிக்க வேண்டும்.
125.52 மி.மீ., மழை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து அவ்வப்போது மழை பரவலாக பெய்து வருகிறது. பேரிடர் மேலாண்மை கணக்கெடுப்பின் படி, நடப்பு மாதத்தில் 125.52 மி.மீ., அளவு மழை பெய்துள்ளது. மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு இல்லாததால் மழைநீர், சாலையோரங்களில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து வீணாகிறது. ஓடைகள் புதர்மண்டி கிடப்பதால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. எனவே, மாவட்டத்தில் ஏரிகளுக்கு நீர் வரும் ஓடைகளை போர்க்கால அடிப்படையில் துார் வார வேண்டும்.