மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி தியாகதுருகத்தில் டிச 5, 6ல் நடக்கிறது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி, வரும் டிச.5, 6 தேதிகளில் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு :தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள், காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி, மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காந்தி பிறந்தநாளை முன்னிட்டு டிச.5 அன்றும், நேரு பிறந்தநாளை முன்னிட்டு டிச.6 அன்றும், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.மேலும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு சிறப்பு பரிசாக ரூ.2,000 வழங்கப்படும்.எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.