அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை மறுதினம் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளதாக முதல்வர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : பாவந்துாரில் இயங்கும் அரசு கல்லுாரியில், 5 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு, முதலாமாண்டு கல்லுாரியில் சேர விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை மறுதினம் நடக்கிறது. இதில், பி.ஏ., தமிழ், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கணினி அறிவியல் மற்றும் புள்ளியியல் ஆகிய 4 பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். அதேபோல், பி.ஏ., பொருளாதார பாடத்திற்கு விண்ணப்பித்தோருக்கு வரும், 10ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் பெற்றோரை கட்டாயம் அழைத்து வர வேண்டும். மேலும், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் மற்றும் சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் எடுத்து வரவேண்டும். தாமதமாக வரும் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது. தேர்வு செய்யப்படும் மாணவர்கள், சேர்க்கை கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இக்கல்லுாரியில் சேர விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது தரவரிசைப்படியலை www.gascrishivandiyam.inஎன்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.