அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மீது மாணவர்கள் ஊழல் குற்றச்சாட்டு
திருக்கோவிலுார : அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஊழல் நடைபெறுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுாரில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. 6 தொழிற்பிரிவுகளில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சில நாட்களாக கல்லுாரி நிர்வாகத்தின் மீது மாணவர்களும், மாணவர்கள் மீது கல்லுாரி நிர்வாகத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர்.இந்நிலையில், ஆசிரியர்களுக்குள் கோஷ்டி உருவாகி, உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்புவது, அவர்களுக்குள் வாக்குவாதம் என்ற நிலை விரிவடைந்து சமீபத்தில் கைகலப்பு வரை சென்றுள்ளது.கடந்த 18ம் தேதி கல்லுாரியின் விரிவுரையாளர்களான ராம்சுந்தர், ஐயப்பன் இருவருக்கும் இடையே மோதலாக உருவெடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு வரை சென்றது.இதற்கிடையே கல்லுாரி நிர்வாகத்தின் மீது மாணவர்கள் சுமத்தும் ஊழல் புகார்களை மெய்ப்படுத்தும் வகையில், ஆசிரியர்களே மாறி மாறி புகார் பட்டியலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் இண்டர்ன்ஷிப் பயிற்சிக்கு அனுப்பி வைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக நில அளவைத்துறை, பி.எஸ்.என்.எல்., - என்.எல்.சி., போன்ற அரசுத்துறை நிறுவனங்களுக்கு மாணவர்களை கல்லுாரி நிர்வாகம் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் பயணப்படி, உணவு கட்டணம் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு என ரூ.16,600 வழங்குகிறது. ஆனால், அரசு துறை நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்பாமல், தங்களுக்கு சாதகமான தனியார் நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்பி, அதன் மூலம் கல்லுாரி நிர்வாகத்தினர் பணப்பலன் பெறுவதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.குற்றச்சாட்டு வெளிவந்த நிலையில், ஒவ்வொரு மாணவரிடமும் மிரட்டி அதனை மறுக்கும் வகையில் கடிதம் பெறப்பட்டதாகவும், கல்லுாரிக்கு உபகரணங்கள் வாங்கியதிலும் ஊழல் நடந்திருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.கல்லுாரி நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழும் நிலையில், உயர்கல்வித்துறை இனியும் வேடிக்கை பார்க்காமல், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என பெற்றோர் எதிர்பாக்கின்றனர்.