கள்ளக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அவதி: போதுமான வகுப்பறைகள் இல்லாமல் தொடரும் அவலம்
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாமல்மாணவர்கள் அவதிப்படுவது கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது.கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நுாற்றாண்டு பழமை வாய்ந்த இப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நபார்டு வங்கி நிதியுதவியில் புதிதாக 20க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டப்பட்டன. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட உடனேயே, இந்த கூடுதல் வகுப்பறைகள் கலெக்டர் அலுவலகத்தின் கூடுதல் தேவைக்காக பயன்படுத்த துவங்கினர். இத்துடன் கல்வி அலுவலகம் சார்பில், மாவட்டம் முழுதும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய அரசின் இலவச நோட்டு, புத்தகங்கள் வைக்கும் குடோனாக இந்த பள்ளியின் வகுப்பறைகள் சிலதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதனால், இப்பள்ளியில் வகுப்பறைகளின்றி மாணவர்கள் பரிதவிக்கும் அவலம் ஏற்பட்டது. மரத்தடியில் பல வகுப்புகள் நடத்தப்பட்டு மழை, வெள்ளத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலை நீடித்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டி வந்தது. இந்நிலையில் அரசு பள்ளியில் செயல்பட்டு வரும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும் கடந்த மார்ச்சில் அகற்றப்படும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து லோக்சபா தேர்தல் நடந்ததால், பள்ளியிருந்து அரசு அலுவலங்கள் அகற்றும் பணி கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பள்ளியில் இயங்கி வந்த ஒரு சில அலுவலகங்கள் மட்டும் அங்கிருந்து மாற்றப்பட்டன. இதனால் கொஞ்சம் வகுப்பறைகள் கிடைத்த மகிழ்ச்சியில் மாணவர்களின் சிலர் மகிழ்ச்சி அடைத்தனர்.ஆனால் இப்போதும் பள்ளி வளாக கட்டடத்திலேயே அரசு அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கி வருவது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. உரிய வகுப்பறைகள், கரும்பலகை உள்ளிட்ட முக்கிய வசதிகள் இல்லாமல் மாணவர்களின் கல்வி கற்கும் சூழல் மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சியில் வெகு காலமாக நீடித்து வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.அத்துடன் இப்பள்ளி வளாகத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் போதுமான கழிவறை வசதி இல்லாமல் இருப்பது மாணவர்களுக்கு கூடுதல் அசவுகரியங்களை ஏற்படுத்தி வருகிறது.எனவே, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் பிற துறை அலுவலகங்களை முழுமையாக காலி செய்து, வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்வி அலுவலக பயன்பாட்டிற்காக வகுப்பறைகளை குடோன்களாக பயன்படுத்துவதையும் தடுத்திட, புதிதாக பொறுப்பேற்றுள்ள சி.இ.ஓ., உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் பாதுகாக்கப்படும் என என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.