உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தியாகதுருகம் பகுதியிலுள்ள தஞ்சாவூர் சாலையால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு

தியாகதுருகம் பகுதியிலுள்ள தஞ்சாவூர் சாலையால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு

தியாகதுருகம் : தியாகதுருகம் நகரை ஒட்டி ரூ.11 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் சாலையால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.தியாகதுருகம் நகரின் மையத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மலை மீது திப்புசுல்தான் காலத்திய கோட்டை உள்ளது. மலை மீது 3 பிரம்மாண்ட பீரங்கிகளும் உள்ளது.தஞ்சாவூரில் இருந்து திருவண்ணாமலை வழியே சித்தூர் செல்லும் சாலையில் தியாகதுருகம் அமைந்திருந்ததால் அக்காலத்தில் இங்குள்ள மலை மீது கோட்டை அமைத்தனர். இதனால் இவ்வழியே செல்லும் சாலையை பாதுகாப்பு கருதி ராஜாக்கள் பயன்படுத்தி உள்ளனர்.ராஜபாட்டையான இதனை தஞ்சாவூரான் சாலை என்ற அடைமொழியோடு மக்கள் அழைத்தனர்.இச்சாலை மலையின் மேற்கே நகரின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. நாளடைவில் இது பயன்பாடின்றி முட்செடிகள் வளர்ந்து சாலை இருக்கும் இடம் தெரியாத வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.தியாகதுருகம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தஞ்சாவூரான் சாலையை மீட்டு அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து தஞ்சாவூரான் சாலையை மீண்டும் அமைக்க வேண்டும் என ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.இத்திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்ததையடுத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இச்சாலையை 2 கி.மீ., நீளத்திற்கு அமைக்க ரூ. 11 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இவ்வழித்தடத்தில் 2 குளங்களை செப்பனிட்டு தூர்வாரி தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டது.மிகவும் பள்ளமான இடங்களை சமன்படுத்தி சாலை உறுதியாக அமைக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள உயர்மின் கோபுரம் ஒன்று இச்சாலையின் நடுவில் உள்ளதால் அதனை வேறு இடத்திற்கு மாற்றும்பணி நடந்து வருகிறது.மற்றபடி சாலை அமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் இச்சாலை பயன்பாட்டுக்கு வரும் என்பதால் நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து விடும். திருவண்ணாமலை, திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் இப்புதிய சாலையை புறவழி சாலையாக தி நகருக்கு செல்லாமல் எளிதாக கடந்து விடமுடியும்.நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் நூற்றாண்டு பழமையான தஞ்சாவூர் சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை