உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியின் அடையாளமாக திகழ்கிறது நுாற்றாண்டை கடந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

கள்ளக்குறிச்சியின் அடையாளமாக திகழ்கிறது நுாற்றாண்டை கடந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நுாற்றாண்டைக் கடந்த பழமையான பள்ளியாகும். கடந்த ஜனவரி 31ம் தேதி நுாற்றாண்டு விழா கொண்டாப்பட்டது. விழாவில் கலெக்டர் பிரசாந்த் நுாற்றாண்டு சுடரை ஏற்றி வைத்தார்.இப்பள்ளி கடந்த 1918ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக துவங்கப்பட்டது. 1938ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும் தொடர்ந்து 1978ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது, தனியார் பள்ளிகளுக்கு இணையான புதிய தொழில் நுட்ப வசதிகளுடன் திகழ்கிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உட்பட 65 பேர் பணிபுரிகின்றனர். 6 முதல் பிளஸ் ௨ வரை 1,650 பேர் படிக்கின்றனர்.இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் அரசு துறைகளில் மட்டுமின்றி தனியார் துறைகளிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.குறிப்பாக 'ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா' வழங்கிய இளம் அறிஞர் விருது மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது உட்பட பல விருதுகளை பெற்று ராஜாராமன் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.அதேபோல் சினிமா துறையில் புகழ் பெற்று விளங்கும் இயக்குனரான முருகதாஸ், அரசு துறையில் தற்போது தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் உள்ள சிவனருள் ஆகியோரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர்.பள்ளியில் 1.60 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி 20 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளுக்கு 4 அறிவியல் ஆய்வகங்களும், இடைநிலை வகுப்புகளுக்கு ஒரு அறிவியல் ஆய்வகமும் பயன்பாட்டில் உள்ளன. மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு முறையில் கற்றுக் கொள்ள உயர் தொழில் நுட்பக் கூடமான 'அட்டல் டிங்கரிங் லேப்' செயல்பட்டு வருகிறது. இவை மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. மாணவர்களின் தொழில் நுட்ப திறனை அதிகரிக்கவும், மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை சோதனையிடவும் 'ஹைடெக் லேப்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 50க்கும் மேற்பட்ட கணினிகள், கணினி ஆய்வகம் மற்றும் ஹைடெக் லேப் மாணவர்களின் உயர் கல்விக்காக அமைக்கப்பட்டுள்ளது.இப்பள்ளி மாணவர் மனோஜ் கடந்த 2022-23ம் ஆண்டு கலை திருவிழா போட்டியில் மாநில அளவில் தேர்வாகி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு கல்விச் சுற்றுப் பயணம் தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் அழைத்து செல்லப்பட்டார். மேலும் மாணவர் சுரேஷ்குமார் சிறார் திரைப்பட போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். பள்ளிக் கல்வி துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் கவின்பாலா, தமிழ் பிரபா, யுவன், நித்திஷ்வர்மன் ஆகியோர் மாநில அளவில் 5ம் இடத்தை பிடித்தனர். கடந்தாண்டு முதலமைச்சர் திறன் தேர்வு போட்டியில் இப்பள்ளி மாணவர்களான மோகேஷ்வரன், மகதி, நவீன் பிரபா சிறப்பிடம் பெற்றனர். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வில் கடந்தாண்டு 3 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.நீட், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கு சிறந்த வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் தமிழ், ஆங்கில நாளிதழ்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக நாள்தோறும் வாங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பல துறையைச் சார்ந்த அதிகாரிகளால் வழிகாட்டுதல் பயிற்சி, தன்னம்பிக்கை ஊட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பள்ளி பசுமைப் பள்ளி திட்டத்திலும் தேர்வாகி, அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முன்மாதிரி பள்ளியாக திகழ்ந்து வருகிறது.-மலையரசன்,எம்.பி.,

எம்.பி., அட்வைஸ்

பள்ளிக்கு, என்னுடைய பங்களிப்பாக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு அமைத்து கொடுத்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கியுள்ளனர். கிராமத்தில் பிறந்த நான் தமிழக முதல்வரால் அடையாளம் காட்டப்பட்டு எம்.பி.,யாக உள்ளேன். அதுபோன்று இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து இப்பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் நற்பெயரை வாங்கி கொடுக்க வேண்டும்.-சுப்ராயலுபெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்.

பெருமிதம் கொள்கிறேன்

நான் படித்த இப்பள்ளியில், தற்போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும், நகர மன்ற தலைவராக உள்ள நான் நமது ஊரை எவ்வளவு சிறப்பாக மாற்ற முடியுமோ அந்த அளவுக்கு எனது பணியினை செய்து வருகிறேன். தமிழக முதல்வர், மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி, மதிய உணவு, பஸ் பயண அட்டை போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களை அளித்து வருகிறார். இப்பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.-கலாபன்பள்ளி தலைமை ஆசிரியர்

வளர்க்கும் பள்ளி

பள்ளியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறைகள், பரந்த விளையாட்டு திடல், அன்பு மற்றும் அறிவுசார்ந்த ஆசிரியர்களின் செயல்பாடு மாணவர்களின் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, கலெக்டர், சி.இ.ஓ., - டி.இ.ஓ., - பி.டி.ஏ., பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள், இப்பள்ளியின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்குகின்றனர். மாணவர்கள் விளையாட்டு மட்டுமின்றி போட்டி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று பயன்பெறுகின்றனர். அனைத்து ஆளுமைத் திறமைகளையும் வளர்த்தெடுக்கும் நல்லதொரு பள்ளியாக இப்பள்ளி செயல்படுகிறது. -காயத்ரி,பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்

செவ்வனே செய்கின்றனர்

இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் பல்வேறு உயர்வான பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். இனிவரும் காலங்களிலும் இங்கு பயிலும் மாணவர்கள் சிறப்பான பதவிகளில் பணியாற்றுவார்கள். இப்பள்ளி தலைமை ஆசிரியரும், இருபால் ஆசிரியர்களும் தங்கள் பணியினை செவ்வனே செய்து வருகின்றனர். கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு, தேசிய பசுமைப்படை, சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை போன்ற பல்வேறு சிறப்பு பயிற்சிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. நம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் இப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி மேன்மைபெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை