உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் கிடப்பில் போடப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி

கள்ளக்குறிச்சியில் கிடப்பில் போடப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேலாகும் நிலையில் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு விழுப்புரத்தை இரண்டாக பிரித்து, அதில் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர், எஸ்.பி., சி.இ.ஓ., உட்பட பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அலுவலகங்கள் வந்தன. கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாலான கிராமப்புறங்களை உள்ளடக்கிய பின்தங்கிய பகுதி. மாவட்டத்தில் பொழுது போக்குக்கென பூங்கா, பெரிய அளவிலான வணிக வளாகம் இல்லை. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்குள்ள இளைஞர்கள் கிரிக்கெட் போட்டிக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர். மேலும், சிலம்பம், வாலிபால், கபாடி, பேட்மிட்டன் உட்பட பல்வேறு வகையான விளையாட்டுகளிலும் ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர். ஆனால், விதிமுறைகளை பின்பற்றி விளையாடி சரியாக பயிற்சி பெற்று, அடுத்த நிலைக்கு முன்னேறும் அளவிற்கு மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால், ஏரி புறம்போக்கு உள்ளிட்ட அரசு இடத்திலும், காலி வீட்டுமனைகளிலும் பெயரளவுக்கு விளையாடி பொழுதை போக்குகின்றனர்.கடந்த 2023ம் ஆண்டு ஏப்., மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், கள்ளக்குறிச்சி உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என தற்போதைய துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சட்டசபையில் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகும் நிலையில், மாவட்டத்தில் இதுவரை மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ