பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை பாரம் தாங்காமல் சரிந்ததால் பரபரப்பு
ரிஷிவந்தியம் : பகண்டைகூட்ரோட்டில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடையின் ஒரு பகுதி மேற்கூரை பாரம் தாங்க முடியாமல் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ரிஷிவந்தியம் ஒன்றியம், பகண்டைகூட்ரோடு மும்முனை சந்திப்பில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதியுடன் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிகள் நடக்கிறது. நிழற்குடையின் ஒரு பகுதி மேற்கூரை நேற்று மதியம் சரிந்தது. இதை அங்கிருந்தவர்கள் இதை வீடியோ எடுத்து, தரமற்ற பணிகளால் பஸ் நிழற்குடை இடிந்து விழுந்ததாக கூறி சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தகவல் அறிந்த ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செல்வகுமரன், பி.டி.ஓ., துரைமுருகன் மற்றும் பொறியாளர் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.இது குறித்து பி.டி.ஓ., துரைமுருகன் கூறியதாவது: பஸ்நிழற்குடை கட்டுமான பணிகள் கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது. இதில் முகப்பு தோற்றத்தை மாற்றுமாறு ஒப்பந்ததாரிடம் நேற்று அறிவுறுத்தப்பட்டது. இதற்காக, செங்கல், சிமென்ட், எம்-சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் நிழற்குடையின் மேற்கூரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, தரைத்தளத்தில் இருந்த கட்டுமான பணியாளர்கள் கான்கிரீட் போடுவதற்காக அமைக்கப்பட்ட சவுக்கு கம்பங்களை அகற்றியதால், பாரம் தாங்க முடியாமல் மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்தது. இதை சிலர் தவறான தகவலுடன் பரப்புகின்றனர் என பி.டி.ஓ., துரைமுருகன் தெரிவித்தார்.