அனுமதி பெற்ற மனை பிரிவுகளுக்கும் கமிஷன்; பன்மடங்கு விலை உயர்வுக்கு இதுவும் காரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழில். கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்வோரின் போட்டியால் சாலையோர விவசாய நிலங்களின் விலை பன்மடங்கு உயர்ந்து விட்டது. பல இடங்களில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி, டி.டி.சி.பி., அனுமதி பெறாமல், 10 சென்ட் அளவில் மனையை பிரித்து விற்பனை செய்து விடுகின்றனர். அரசு விதிமுறைப்படி 10 சென்ட் அளவைவிட குறைவாக இருந்தால் அதற்கு அரசு அனுமதி பெற வேண்டும். இதனால் மனை பிரிவுகளை 10 சென்ட்டுக்கு மேல் அமைத்து, இடைத்தரகர்கள் மூலம் பத்திரபதிவு செய்து விற்பனை செய்கின்றனர். டி.டி.சி.பி., அனுமதி பெறாத இடங்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க முடியாது என்பதால், இம்மனைப்பிரிவுகளை விற்பனை செய்ய ஊராட்சி தலைவர்கள் சிலர் அனுமதிப்பதில்லை. சில தலைவர்களை கவனித்து நிலத்தை விற்பனை செய்து விடுகின்றனர். அனுமதி பெறாத மனை பிரிவுகளுக்கு கமிஷன் பார்த்த சில தலைவர்கள், முறையான டி.டி.சி.பி., அனுமதி பெற்ற்ற மனை பிரிவுகளுக்கும் பணம் கேட்டு தொந்தரவு கொடுக்க துவங்கி விட்டனர். நிலத்தை மனை பிரிவாக மாற்ற டி.டி.சி.பி., அனுமதி, பத்திர பதிவு செய்ய பெருந்தொகை செலவிடப்படுவதாகவும், இந்த நிலையில், சில உள்ளாட்சி பிரதிநிதிகள் அனுமதி பெற்ற மனை பிரிவுக்கும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதனால் மனைகளை நியாயமான விலைக்கு விற்பதை விட, பன் மடங்கு விலை உயர்த்தி விற்கும் நிலை உருவாகிறது.