போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் தற்காலிக ெஷட்டில் இயங்கும் அவலம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் போக்குவரத்து பிரிவு போலீஸ் ஸ்டேஷனிற்கு சொந்த கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோவிலுார் போக்குவரத்து பிரிவு போலீஸ் ஸ்டேஷன் 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டை கோபுரம் அருகே ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மதில் சுவற்றையொட்டி தற்காலிக ஷெட்டில் துவங்கப்பட்டது. இங்கு, ஒரு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்த கட்டடம் இல்லாததால், போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் சாலையோரம் பாதுகாப்பற்ற நிலையில், நிறுத்தி வைக்கப்படும் அவல நிலை உள்ளது. குறிப்பாக, வெயில் காலங்களில் பகல் நேரத்தில் ஷெட்டில் உட்கார முடியாத அளவிற்கு கடும் வெப்பம் நிலவுகிறது. சாலை ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய போலீசாரே சாலையை ஆக்கிரமித்து வானகங்கள் நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலீசாரின் வழக்கமான பணிகளும் பாதிக்கப்படுகிறது. சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, போலீசார் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, போக்குவரத்து பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்த கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.