இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து மேளம் வாசித்த வாலிபர் பலி உளுந்துார்பேட்டை அருகே சோகம்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே இறுதி ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்த விபத்தில், மேளம் வாசித்த வாலிபர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த கீழ்குப்பம் வேலுார் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை, 60; இறந்ததையடுத்து, நேற்று மாலை இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது, வான வெடி வெடித்தபோது, தீப்பொறி விழுந்ததில், பட்டாசு பண்டல்கள் வெடித்து சிதறியது. அப்போது இறுதி ஊர்வலத்தில் மேளம் வாசித்து கொண்டு சென்ற உளுந்துார்பேட்டை அ டுத்த பெரும்பட்டு பகுதியை சேர்ந்த அய்யாதுரை மகன் மூர்த்தி, 23; பலத்த காயமடந்து சம்பவ இடத்திலே இறந்தார். வெடி விபத்தில் அயன்வேலுார் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, 50; ராமலிங்கம், 45; கீழ்குப்பம் வேலுார் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல், 45; பிரகாஷ், 36; அயோத்தி மனைவி ஜெயா, 55; ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இறுதி ஊர்வலத்தில் காயமடைந்தவர்களை மீட்டு முண்டிம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தை எஸ்.பி.,மாதவன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். துக்க நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.