புத்தாக்க மேம்பாடு திட்டம் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில்முனைவோர் புத்தாக்க மேம்பாடு திட்ட வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வி துறையும் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாடு என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைதல் சிந்தனையை வளர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் கண்டறியும் சிறந்த புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ. 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சம் வரை பரிசு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தமாக 60 அணிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. நடப்பாண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புத்தாக்க மேம்பாட்டு திட்ட வழிகாட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நேற்று நடந்தது. மாவட்ட திட்ட மேலாளர் அறிவொளி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். சி.இ.ஓ., கார்த்திகா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆலோசனை வழங்கினார். பயிற்சியில் பள்ளிகளை இணையதளத்தில் பதிவு செய்யும் விதம், புத்தாக்கம் மற்றும் தொழில் முனைதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆசிரியர்கள் மாணவர்களுக்கான இணையதள கற்றலை நிறைவு செய்தல், புத்தாக்க சிந்தனைகளை உருவாக்குதல் குறித்து விளக்கி கூறப்பட்டது. ஒரு நாளுக்கு 85 ஆசிரியர்கள் வீதம் 251 ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப் பட்டது.