ஸ்பான்சர்கள் கிடைத்தால் மிஸ் கூவாகம் நடத்துவோம்; திருநங்கையர் கூட்டமைப்பு அறிவிப்பு
கள்ளக்குறிச்சி; கூவாகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்கிட வேண்டும் என தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு தலைவர் மோகனாம்பாள் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:கூவாகம் திருவிழா வரும் மே 13, 14 தேதிகளில் நடத்த உள்ளோம். இதில் 3 லட்சத்திற்கும் அதிகமான திருநங்கைகள், பொதுமக்கள் பங்கேற்பர்.திருநங்கைகள் சித்ரா பவுர்ணமி அன்று கூத்தாண்டவரை வேண்டி, மாங்கல்யம் அணிந்து, மறுநாள் தேர்வடம் முடிந்து களபலி நிகழ்வுக்குப்பின் துக்கம் அனுசரித்து விதவை கோலம் தரிப்பர்.திருநங்கைகளின் கலாசார அடிப்படையில் நடத்தப்படும். இதில் அரசியல் பிரமுகர்கள், கலையுலகம், சமூக நல அமைப்பு சார்ந்த வல்லுனர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.இதுவரை நடந்த விழாக்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. இருப்பினும் விழாவிற்கான வசதிகளை இதுவரை முழுமையாக செய்து கொடுக்கப்படவில்லை.எனவே விழா நடத்தப்படும் பகுதிக்கான பாதைகளை முறைப்படுத்தி, போதிய வாகனங்களை இயக்கி போக்குவரத்து வசதிகளை சீரமைக்க வேண்டும். கடும் கோடையில் நடக்கும் இந்நிகழ்வுக்கு போதுமான குடிநீர் வசதி, நிழற்குடைகள், ஓய்விடங்கள், கழிவறைகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை மேம்படுத்தி வழங்கிட வேண்டும். முழுமையான காவல் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை கொடுத்த பின் நிருபர்களிடம் கூறுகையில், கூவாகத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுத்துள்ளோம். அனைத்தையும், தற்காலிக அடிப்படையில் அல்லாமல், நிரந்தரமானதாக அமைத்து கூவாகத்தை சுற்றுலா தலமாக்கிட வேண்டும். தகுதியான திருநங்கைகள் 3 பேருக்கு அங்கன்வாடி பணியாளர் அரசு பணி வழங்கிட வேண்டும். விழுப்புரத்தில் தனியார் தங்கும் விடுதி கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.போதிய ஸ்பான்சர்கள் கிடைத்தால் கள்ளக்குறிச்சியிலேயே மிஸ் கூவாகம் நிகழ்ச்சியையும் நடத்துவோம்' என்றார்.மிஸ் கூவாகம் ஒருங்கிணைப்பாளர் அருணா, கள்ளக்குறிச்சி மாவட்ட திருநங்கையர் சங்க தலைவி சிந்து, புதுக்கோட்டை மாவட்ட திருநங்கையர் சங்க தலைவி ஹசீனா உடனிருந்தனர்.