உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோவில் வழிபாட்டில் இரு தரப்பு பிரச்னை; மேளதாளத்திற்கு அனுமதி மறுப்பால் மறியல்

கோவில் வழிபாட்டில் இரு தரப்பு பிரச்னை; மேளதாளத்திற்கு அனுமதி மறுப்பால் மறியல்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே அய்யனார் கோ வில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை நிலவிய நிலையில், வழிபாட்டில் மேளதாளத்திற்கு அனுமதி மறுப்பால் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் கிராம மக்களுக்கு மணிமுக்தா அணைகரை அருகே பூர்ண புஷ்களா அய்யனார் கோவில் உள்ளது. அதேபோல் அணைக்கரைகோட்டாலம் பகுதி சேர்ந்த மற்றொரு தரப்பு மக்களுக்கு வேறொரு இடத்தில் அய்யனார் கோவில் உள்ளன. இந்நிலையில், அணைக்கரைகோட்டாலத்தில் பொன்னு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பூர்ண புஷ்களா அய்யனார் கோவிலில் நேற்று பொங்கல் வைத்து வழிபட முடிவு செய்தனர். இதற்கு அகரகோட்டாலம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 5ம் தேதி அணைக்கரைகோட்டாலம் பொன்னு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்படும் சூழலால் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் சமாதன கூட்டம் நடந்தது. இரு தரப்பு முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். அதில் அணைக்கரைகோட்டாலம் மக்கள் கோவிலில் பொங்கல் வைக்காமல், பூஜை பொருட்கள் மட்டும் கொண்டு சென்று வழிபடலாம் என உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று பகல் 2 மணியளவில் அணைக்கரைகோட்டாலம் மக்கள் பூஜை பொருட்களுடன் மேளதாளத்துடன் கோவிலில் வழிபட புறப்பட்டு சென்றனர். அப்போது, மேளதாளம் அடித்து செல்ல அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேளதாளத்துடன் தான் செல்வோம் என 2.15 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் டி.எஸ்.பி., தங்கவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதி முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மேளதா ளம் அடிக்காமல் செல்வதாக கூறி, 3 மணிக்கு மறியலை கைவிட்டு அனைவரும் ஊர்வலமாக சென்று அய்யனாரை வழிபட்டு வந்தனர். அப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., மாதவன் மேற்பார்வையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை