வாட்டர் வாஷ் கடையில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
தியாகதுருகம்: கார் வாட்டர் வாஷ் செய்தபோது, மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம், அண்ணா நகரை சேர்ந்தவர் கலிபுல்லா, 60. இவர், 'வாட்டர் வாஷ்' கடை, டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது டிராவல்சில், கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்த அரவிந்தன், 26, டிரைவர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, கலிபுல்லா மொபைல் போன் மூலம் அரவிந்தனிடம், சவாரி செல்ல இருப்பதால், 'செவ்ரோலெட் டவேரா' காரை 'வாட்டர் வாஷ்' செய்யுமாறு தெரிவித்தார். இரவு, 10:00 மணிக்கு, அரவிந்தன் காரை கழுவிய போது, அரவிந்தன் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்த கரீம்ஷா தக்காவை சேர்ந்த ஷாகில், 18, என்பவர் அரவிந்தனை காப்பாற்ற முயன்றதில், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் உயிரிழந்தனர். தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.