| ADDED : நவ 26, 2025 07:27 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில், தேர் நிறுத்துவதற்கு, தனி நபர் ஆக்கிரமித்துள்ள இடத்தைக் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராம காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழாவிற்காக புதிதாக தேர் செய்யப்பட்டு, ஆடி மாதம் திருவிழா முடிந்த நிலையில், தேரை கோவில் வாசலில் நிறுத்தி வைத்திருந்தனர். திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருந்ததால் மழையில் நனைந்தது. தேரை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்பதற்காக, கோவிலுக்கு அருகே அரசு புறம்போக்கு இடத்தில் தகர ஷீட் போட்டு ஆக்கிரமித்துள்ள கண்ணன் என்பவரிடம் அந்த இடத்தை தேர் நிறுத்திக் கொள்ள தரும்படி அனுமதி கோரினர். அதற்கு கண்ணன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் நேற்று காலை 9:00 மணியளவில் கொசப்பாடியில் சங்கராபுரம் சாலையில் தேருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார், ஊர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து தாசில்தாரிடம் பேசி ஓரிரு நாட்களில் விபரம் தெரிவிப்பதாக கூறியதன் பேரில் ஊர் மக்கள் 10:00 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 17 பேர் மீது வழக்கு மறியலில் ஈடுபட்ட காலனி தரப்பைச் சேர்ந்த மைக்கேல், பிரபாகரன், தென்னவன், செல்வராஜ், ஜெயப்பிரகாஷ், பெரியசாமி, கண்ணன் உட்பட 17 பேர் மீது அனுமதியின்றி சாலை மறியல் செய்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.