உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விருகாவூர் தடுப்பணையிலிருந்து தண்ணீர் வீணாகிறது! சேதம் அடைந்த மதகு சீரமைக்கப்படுமா?

விருகாவூர் தடுப்பணையிலிருந்து தண்ணீர் வீணாகிறது! சேதம் அடைந்த மதகு சீரமைக்கப்படுமா?

தியாகதுருகம் அடுத்த விருகாவூர் அருகே கோமுகி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. பருவ மழை போதிய அளவு பெய்யும்போது தடுப்பணை நிரம்புகிறது.இங்கிருந்து கால்வாய் மூலம் அருகில் உள்ள நாகலுார், கண்டாச்சிமங்கலம், வடபூண்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் இப்பகுதியில் 500 ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகிறது.அதேபோல் தடுப்பணையில் தண்ணீர் தேக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சுற்று வட்டாரத்தில் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செழிக்க காரணமாக உள்ளது. இதன் காரணமாக நெல், கரும்பு ஆகிய நன்செய் பயிர்கள் இப்பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.இதனால் விருகாவூர் தடுப்பணை இப்பகுதி மக்களின் முக்கிய ஜீவாதாரமாக விளங்குகிறது. கடந்தாண்டு இறுதியில் பெய்த கன மழை காரணமாக தடுப்பணை நிரம்பியது.அடுத்தடுத்த மாதங்களில் பெய்த மழையால் ஆற்றில் நீரோட்டம் உள்ளதால் தற்போது தடுப்பணையில் நீர்மட்டம் குறையாமல் உள்ளது. தடுப்பணையிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் மதகின் தடுப்பு சுவர் மற்றும் கேட் வால்வு பல ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுவரை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இதன் காரணமாக தடுப்பணையில் தண்ணீர் தேங்காமல் சேதமடைந்த மதகின் வழியே வெளியேறி விரயமாகி வருகிறது. இதனால் விரைவில் தடுப்பணை வறண்டு விடும் சூழல் உள்ளது. கோடைகாலத்தில் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி இருந்தால் மட்டுமே இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் பயனடைய முடியும்.பருவமழை போதிய அளவு பெய்து தடுப்பணை நிரம்பிய போதும் உடைந்த மதகின் வழியே விரயமாகும் தண்ணீரை பாதுகாப்பாக தேக்கி வைக்க முடியவில்லை.அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.மதகு உடைந்து தடுப்பனையிலிருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை தடுத்து பாதுகாத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ