உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் தொட்டிகள் காட்சிப்பொருளான அவலம்: பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் பாதிப்பு

குடிநீர் தொட்டிகள் காட்சிப்பொருளான அவலம்: பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் பாதிப்பு

உளுந்துார்பேட்டை, தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்த போது கடந்த, 2014--15 ம் ஆண்டில் அப்பகுதியில் உள்ள காயிதேமில்லத் தெரு மற்றும் சமுத்திர குளம் அருகே, குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க, இயக்கம் பராமரிப்பு நிதி திட்டம் மற்றும் பொதுநிதியின் கீழ், ரூ. 25.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டிக்கு, மட்டிகை கிராமத்தில் இருந்து வரும் குழாய் இணைப்பு மூலம், குடிநீரை ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகிக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து காயிதேமில்லத் தெரு, சிவகுருநாதர் தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, அண்ணாநகர், பச்சையப்பா நகர், நகராட்சி காலனி குடியிருப்பு , கார்த்திகேயன் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க, குடிநீர் மேல்நிலை தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியை சுற்றி, சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது.ஆனால் இதையடுத்து குடிநீர் வினியோகத்திற்கான, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அங்கு கட்டப்பட்ட மேல்நிலைத்தேக்க தொட்டியின் பல ஆண்டுகளாக காட்சி பொருளாக காணப்படுகிறது. இதன் படிக்கட்டுகள் உடைக்கப்பட்டு கம்பிகள் அடிக்கடி திருடப்பட்டு வருகிறது. மேலும், பயனற்றுக் கிடக்கும் அப்பகுதியை சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்துவதோடு சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதேபோல உளுந்தூர்பேட்டை, சரஸ்வதி நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் இருந்தும், அதற்கு பிறகு மக்களுக்கு பல ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் இல்லை. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' இந்த இரு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளும், பயன்பாட்டிற்கு வராததால், பல லட்சம் ரூபாய் அரசு நிதி வீணாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறையில் பல ஆண்டுகளாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி