களை கட்டும் கந்து வட்டி தொழில்
பகண்டைகூட்ரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள், கூலி தொழிலாளிகள், சிறு, குறு வியாபாரிகள், தொழில் முனைவோர்கள் பலர் உள்ளனர். இப்பகுதி மக்கள் அவசர தேவை, தொழில் மேம்படுத்துதல், வாகனம் வாங்குதல் உட்பட பல்வேறு தேவைகளுக்காக, தங்க நகைகளை அடகு வைத்தும், 2 அல்லது 3 சதவீத வட்டிக்கு கடனாகவும் பணத்தை பெற்று வந்தனர். இந்நிலையில், சமீபகாலமாக பகண்டைகூட்ரோட்டில் கந்து வட்டி தொழில் அதிகரித்துள்ளது. ஒரு சிலர் பொதுமக்களின் அவசர தேவையை சாதகமாக்கி கொண்டு 5 - 10 சதவீத வட்டிக்கு பணத்தை கடனாக வழங்கி வருகின்றனர். இதில், கடனாக பணம் கேட்பவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால், அவர்களின் வாகனம் அல்லது சில பொருட்களை அடமானமாக பெற்று கொண்டு கடன் வழங்குகின்றனர்.கடனாக வாங்கியவர்கள் முறையாக பணம் செலுத்தவில்லை என்றால், வாங்கிய தொகையை விட பலமடங்கு தொகையை செலுத்த நேரிடும்.அல்லது அடமானமாக வழங்கிய பொருட்களை இழக்க நேரிடும். இது குறித்த முறையான புரிதல் இல்லாததால் பொதுமக்கள் பலர் கந்து வட்டிக்கு பணத்தை வாங்கி வருகின்றனர். எனவே, கந்து வட்டிக்கு பணம் வாங்குவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.