உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிங் ரோடு திட்டத்தை செயல்படுத்துவது எப்போது: கள்ளக்குறிச்சி பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ரிங் ரோடு திட்டத்தை செயல்படுத்துவது எப்போது: கள்ளக்குறிச்சி பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்த தீர்வு காணும் பொருட்டு 'ரிங் ரோடு' திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் நகரை கடந்து செல்லும்போது, நகரம் நெரிசலில் ஸ்தம்பித்து விடுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் இயங்கி வருகிறது.மாவட்டம் அறிவிப்புக்கு பின், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அறிவிக்கப்பட்டு சிறுவங்கூரில் கட்டுமான பணிகளும் முடிந்து தற்போது கல்லுாரி திறக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்களில் கள்ளக்குறிச்சியில் செயல்படும் சூழ்நிலையில் மக்களின் வருகைகள் அதிகரித்துள்ளது.அதற்கேற்ப போக்குவரத்து பாதிப்பும் அதிகரித்து வருகிறது. அவசர ஆம்புலன்ஸ்கள், மாவட்ட அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களும் அவ்வப்போது வாகன நெரிசலில் சிக்கி தவிப்பதை காண முடிகிறது. மாவட்டத்தின் தலைநகரமான கள்ளக்குறிச்சியில், வாகன பெருக்கத்திற்கேற்ப சாலை வசதிகள் இன்றி உள்ளது. மாவட்ட துவக்க விழாவின்போது கள்ளக்குறிச்சியில் 'ரிங் ரோடு' திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை இணைக்கும் வகையிலான 'ரிங் ரோடு' திட்டம் செயல்படுத்த முதற்கட்டமாக அளவீடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.'ரிங் ரோடு' திட்டம் விரைவு படுத்தப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கிடப்பில் போடப்பட்டது. தியாகதுருகம், கச்சிராயபாளையம் பகுதியிலிருந்து சிறுவங்கூரில் செயல்படும் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு விரைவாக செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தினமும் அலுவல் பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கள்ளக்குறிச்சி நகரத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர்.எனவே, சிரமமின்றி நகரை கடந்து செல்லும் வகையில் 'ரிங் ரோடு' திட்டம் மிகவும் அவசியமானதாகும். எனவே அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி தியாகதுரும் சாலையில் நீலமங்கலம் பகுதியில் ஏ.கே.டி., பள்ளி அருகே பெருவங்கூர் சாலை வழியாக, பெருவங்கூர், சிறுவங்கூர், ரோடு மாமனந்தல் வழியாக சங்கராபுரம் செல்லும் சாலையில் இணைத்திட வேண்டும்.அதேபோல் சங்கராபுரம் சாலையில் ரோடுமாமனந்தல் பகுதியில் இருந்து சோமண்டார்குடி பகுதியில் உள்ள கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு அரசு கல்லுாரி வழியாக செல்லும் வகையில் கச்சிராயபாளையம் சாலையுடன் இணைக்க வேண்டும்.மேலும் சேலம் சாலையில் தச்சூர் பகுதியில் இருந்து குடிகாடு, காரனுார் வழியாக சென்று கச்சிராயபாளையம் சாலையில் இணைக்க வேண்டும். எனவே 'ரிங் ரோடு' திட்டத்தின் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த கலெக்டர் ஷ்ரவன்குமார் துரித பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி