கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் துவங்குவது... எப்போது? அத்தியாவசிய தேவைக்கு நீண்ட துாரம் செல்வதால் மக்கள் அவதி
விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் 2019ம் ஆண்டு உதயமானது. 2 வருவாய் கோட்டங்கள், 7 வட்டங்கள். 562 வருவாய் கிராமங்கள், 24 குறுவட்டங்களுடன் செயல்பட துவங்கிய கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சிறுவங்கூர் பகுதியிலும், அரசு கலை அறிவியல் கல்லுாரி அதன் அருகில் இயங்கி வருகிறது.நகர பகுதியில் போதிய இடவசதி இல்லாததால் மாவட்ட நிர்வாக அலுவலகம் கள்ளக்குறிச்சி நகரப்பகுதியிலிருந்து 9 கி.மீ., தொலைவில் வீரசோழபுரம் கிராமத்திலும், 11 கி.மீ., தொலைவில் தியாகதுருகம் அருகே பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் பயணியர் இல்லமும், 5.5 கி.மீ., தொலைவில் சடையம்பட்டு கிராமத்தில் அரசு கல்லுாரியும், 5 கி.மீ., தொலைவில் பொற்படாக்குறிச்சியில் ரயில்வே ஸ்டேஷன் என அனைத்தும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ளது.நகர பகுதியில் இருந்து 4 கி.மீ., தொலைவில் தென்கீரனுார் கிராம எல்லையில் புதிய பஸ் ஸ்டாண்டுக்கான இடம் தானமாக பெறப்பட்டு பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு பள்ளி வளாக ஆய்வக கட்டடத்தில் கலெக்டர் அலுவலகத்தின் மாவட்ட ஆவண காப்பகம் செயல்படுகின்றன.மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகமும், மாவட்ட கல்வி அலுவலகத்தில் போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி பரிதாப நிலையில் முதன்மை கல்வி அலுவலகம் 6 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இங்கு இடவசதி இல்லாததால், தேர்வுத்தாள்கள், மாணவர்களுக்கான தளவாட பொருட்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குதிரைச்சந்தல் அரசு பள்ளி வகுப்பறைகளில் வைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்படுகிறது.மாவட்ட தலைநகருக்குள் வர வேண்டிய மாவட்ட நுாலகம், மாவட்ட வன அலுவலகம், மாவட்ட சிறைச்சாலை, மாவட்ட விளையாட்டு மைதானம், மாவட்ட தீயணைப்பு அலுவலகம், தலைமை நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட கிடங்கு போன்ற நிர்வாக அமைப்புகளும் மாவட்டம் துவங்கி 6 ஆண்டுகள் கடந்தும் துவக்கப்படாமலேயே இழுபறி நிலையில் உள்ளது.கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்திலிருந்து வீரசோழபுரத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு செல்ல 11 கி.மீ., தொலைவு செல்ல வேண்டி உள்ளது. இதுபோன்ற நிர்வாக சிக்கல்களால், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி மேலும் பின்னடைவை நோக்கி செல்கிறது. அதனால், தமிழக அரசு கள்ளக்குறிச்சி நகரப்பகுதிக்குள்ளேயே மாவட்ட நிர்வாக அமைப்புகளை உருவாக்கி, உடனடியாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.