உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் அரசு மருத்துவமனை அமைக்கப்படுமா? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கல்வராயன்மலையில் அரசு மருத்துவமனை அமைக்கப்படுமா? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கல்வராயன் மலையின் வடபகுதி சின்ன கல்வராயன் மலை, தென்பகுதி பெரிய கல்வராயன்மலை என அழைக்கப்படுகிறது. மொத்தம் 1,095 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த மலை சேலம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் வரை பரவியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதி புதிய வருவாய் வட்டமாக கல்வராயன்மலை அறிவிக்கப்பட்டது.கல்வராயன்மலை வட்டத்தில், 15 ஊராட்சிகளில், 150 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கல்வராயன் மலையில் 6 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், பல்வேறு கிராமங்களில் இடங்களில் துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கான பரிசோதனைகள், தடுப்பூசிகள் போடுதல், பிரசவம் பார்த்தல் மற்றும் சாதாரண காய்ச்சல் போன்ற சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் அலைகழிப்பு

கல்வராயன் மலையில் மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் வசதிகொண்ட மருத்துவமனை எதுவும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அவசர மற்றும் அறுவை சிகிச்சைகள் பெற முடியாமல் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல, பல கிலோ மீட்டர் துாரத்திற்கு, பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.கல்வராயன் மலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவைகள் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. மேலும் அங்கு கோர்ட் அமைக்கவும், இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான மருத்துவமனையை அமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கல்வராயன்மலையில் உள்ள மாவடிப்பட்டு கிராமத்தில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துவதாக தமிழக அரசு கடந்த, 2019ல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெறும் பெயரளவில் மட்டுமே உள்ளது.

பிரசவ உயிரிழப்புகள்

அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சிறப்பு டாக்டர்கள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, சேலம், முண்டியம்பாக்கம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது.இங்கு விபத்துக்களில் சிக்கியவர்கள் மற்றும் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாமல், நகர பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். நீண்ட துாரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதால் உயிர் பிழைக்கும் வாய்ப்பிருந்தும் குறித்த செல்ல முடியாததால் பலர் இறக்கும் அவல நிலை தொடர்கதையாகி வருகிறது. மேலும் பிரசவத்தின் போது குறித்த நேரத்தில் மேல் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளதால், தாய், சேய் இருவரும் இறந்து போன கொடுமைகளும் அரங்கேறி உள்ளன.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''கல்வராயன் மலையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களை கொண்ட அரசு மருத்துவமனை அமைக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,''என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ