| ADDED : மே 16, 2024 11:37 PM
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் தொல்லியல் துறை அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் கட்டஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருக்கோவிலுார் வரலாற்று சிறப்புமிக்க நகரம். சங்க புலவர்களில் குறிப்பிடத்தக்கவர் கபிலர். இவர் வாழ்ந்து மறைந்த ஊர் திருக்கோவிலுார். மாபெரும் மன்னனாக விளங்கிய ராஜராஜ சோழன் பிறந்த மண். மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி செய்த ஊர். முதல் ஆழ்வார்கள் தோன்றி தமிழில் பாசுரம் பாடிய இடம். பல வரலாற்று பொக்கிஷங்களைக் உள்ளடக்கிய திருக்கோவிலுாரில் தொல்லியல் அருங்காட்சியகம் உள்ளது.திருக்கோவிலுார், கீழையூரில் உள்ள வாடகைக் கட்டடத்தில் துாசு படிந்த அறையில் தொல்லியல் துறையால் 1994ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்ட பொருட்களுடன், சுற்றுவட்டார பகுதியில் உள்ள பழமையான கல்வெட்டு தகவல்கள், அரிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.பழமையின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையிலான இந்த அருங்காட்சியகம் வாடகைக் கட்டடத்தில் இயங்குவதால் அகழாய்வு பொருட்களை முறையாக காட்சிப்படுத்த முடியவில்லை.இதன் காரணமாக பெரும்பாலான நாட்களில் அருங்காட்சியகம் மூடியே கிடக்கிறது. இட நெருக்கடியை போக்கவும், அருங்காட்சியத்தை மேம்படுத்தவும் சொந்த கட்டடம் தேவை என தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தொல்லியல் துறை சார்பிலும், வருவாய்த்துறையிடம் இடம் கேட்டு பல ஆண்டுகளாக மனு அளித்த வருகின்றனர்.திருக்கோவிலுார் நகரில் கோவில் இடங்கள் மட்டுமல்லாது, பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அருங்காட்சியகத்திற்கு இடம் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையே என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பழமையின் பெருமையை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு நம் ஒவ்ஒருவரிடமும் உள்ளது என்பதை இந்த சமூகம் உணர்ந்தால் மட்டுமே நமது வரலாறு நிலைத்திருக்கும். எனவே வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவிலுாரில் இருக்கும் அருங்காட்சியகம் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் பழமை விரும்பிகள் மத்தியில் உள்ளது.தொகுதி எம்.எல்.ஏ., வாக இருக்கும் அமைச்சர் பொன்முடி தலையிட்டு, அருங்காட்சியகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்து, நிதி ஒதுக்கி கட்டுமான பணி மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.