உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூவனுார் ஏரியில் கனிம வளத்தை கடத்தும் மாபியாக்களின் செயல் தடுக்கப்படுமா?

கூவனுார் ஏரியில் கனிம வளத்தை கடத்தும் மாபியாக்களின் செயல் தடுக்கப்படுமா?

திருக்கோவிலுார் அடுத்த கூவனுார், வெள்ளிப்பாடி ஏரியை வருவாய்த்துறை, காவல்துறை உதவியுடன் சமூக விரோத கும்பல்கள் சுரண்டி மண் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஏரியை சீரமைக்கும் நோக்கில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளில் சிலர் கனிம வள கடத்தல் மாபியாக்களுக்கு சாதகமாக மாற்றி விட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.கூவனுார், வெள்ளிப்பாடி ஏரியில் 20 அடி ஆழத்திற்கும் மேலாக ஜே.சி.பி., இயந்திரம் மூலம், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மண் எடுக்கப்படுகிறது. இதனால் ஏரியின் ஒரு பகுதிமட்டும் மிகப்பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.மழைக்காலங்களில் ஏரியின் குட்டைப் பகுதியில் மட்டுமே தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்படுவதால், விவசாயத்திற்கு மதகுகள் வழியாக தண்ணீர் செல்ல முடியாத அபாயம் உருவாகிறது.குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மண் எடுப்பதற்கு முக்கிய காரணம், கனிம வள கடத்தல் கும்பலுக்கு தேவையான கிராவல் மண் இருப்பதுதான். இதனை 20 அடிக்கும் அதிகமான தோண்டி எடுத்து கொள்ளை லாபத்தில் விற்பனை செய்கின்றனர்.வண்டல் மண் எடுப்பது என்றால் ஏரியில் ஒன்று அல்லது இரண்டு அடி ஆழத்தில் மட்டுமே, சமமான அளவில் மண் எடுக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார், பொதுப்பணித்துறை என்றால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகம் என்றால் பி.டி.ஓ., உறுதிப்படுத்தி கண்காணிக்க வேண்டும். மாவட்ட அதிகாரிகள் ஏரியை நேரில் பார்வையிட்டால் உண்மையிலேயே அரசின் சட்ட திட்டங்களை அதிகாரிகள் பின்பற்றி இருக்கிறார்களா என்ற உண்மை வெளிப்படும்.இதுபற்றி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் கலெக்டர் வரை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆதங்கமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை