உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உழவர் நல சேவை மையம் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

உழவர் நல சேவை மையம் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி : முதல்வரின் உழவர் நல சேவை மையம் திட்டத்தின்கீழ் விவசாயிகள் மானியம் பெற்றுப் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; அரசு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள, முதல்வரின் உழவர் நல சேவை மையம் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைத்து விவசாயிகளின் நலனை முன்னேற்றும் நோக்கில் செயல்பட உள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில் இந்தத் திட்டத்தின் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக ரூ.10 முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான மையங்களை அமைத்திட 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அத்துடன் விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்குதல், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல், தோட்டக்கலை இடுபொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த நபர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி நடைமுறை பின்பற்றிக் கடன் ஒப்புதல் பெறப்பட்ட பின், இத்திட்டத்தில் மானிய உதவி பெற வேண்டி அக்ரிஸ்நெட் இணையதளத்தில் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வேளாண் கூட்டமைப்பு நிதி வலைதள முகப்பில் அக்ரிகல்சர் இன்ப்ராஸ்ரக்ச்சர் பண்ட் போர்ட்டலில் விண்ணப்பிப்பதன் மூலம் 9 சதவீத வட்டியில் கடன் பெற வாய்ப்புள்ளது. தகுதியான திட்டக்கூறுகளுக்கான கடன் தொகைக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் 3 சதவீத வட்டி மானியம் பெறலாம். மேலும் தகவல்களுக்கு, அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி முழுமையான தகவல்களையும் வழிகாட்டுதலையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை