ஆபத்தை உணராத அபாய பயணம்
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம், வல்லம் - வடகால், ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுகோட்டை ஆகிய ஐந்து இடங்களில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில், 1000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.அதே போல், தற்போது புதிய தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகளும் அதிகமாக நடந்து வருகிறது. கட்டுமான பணிக்காக வெளி மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இப்பகுதியில் தங்கி வேலை செய்கின்றனர்.அவ்வாறு, தொழிற்சாலை கட்டுமான வேலைசெய்யும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பின்றி, ஆட்டுமந்தை போல் டிராக்டர் வாகனத்தில் பணிக்கு அழைத்து செல்கின்றனர்.ஆபத்தை உணராமல் டிராக்டர் வாகனத்தின் பின்புறம் அமர்ந்து பயணிக்கும் தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஸ்ரீபெரும்புதுார் தொழிலக பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.