| ADDED : மே 10, 2024 12:57 AM
குன்றத்துார், சென்னை, முகப்பேரில் வசிப்பவர் வெங்கடேசன், 54, இளநீர் மொத்த வியாபாரி. இவரது மனைவி லட்சுமி,50, இவர்களது மகன் சந்தோஷ்,20, குன்றத்துார் அருகே பூந்தண்டலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் 'நீட்' தேர்வு எழுத, கடந்த 5ம்தேதி பெற்றோருடன் சென்றார். தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்து பார்த்தபோது பெற்றோரை காணவில்லை. வீடு திரும்பிய போது, அங்கும் அவர்கள் இல்லை. இதனால், குன்றத்துார் காவல் நிலையத்தில் சந்தோஷ் புகார் அளித்தார். போலீசார் வெங்கடேசன், லட்சுமியை தேடி வந்தனர். இந்நிலையில், சந்தோஷின் மொபைல் போன் எண்ணிற்கு திடீரென தொடர்பு கொண்டு பேசிய தாய் லட்சுமி, சேலத்திற்கு வருமாறு கூறியுள்ளார். இதுகுறித்து குன்றத்துார் போலீசாருக்கு சந்தோஷ் தகவல் தெரிவித்தார். சந்தோஷ் உடன் போலீசாரும் சேலம் சென்றனர். அப்போது சந்தோஷை அழைத்துச் செல்ல வந்த மூவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில், வெங்கடேசன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம், வெங்கடேசன் பணம் பெற்றுள்ளார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டவர்களிடம் தன்னுடைய நிலத்தை விற்றுத் தருவதாக, கூறி வந்துள்ளார். இந்நிலையில், வெங்க டேசனிடம் சொத்தை எழுதி வாங்க, அவரைக் கடத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதில் இறந்து போனார். இதையடுத்து உடலை அங்கேயே புதைத்துள்ளனர். மகன் சந்தோஷ் பெயரில் உள்ள சொத்தை எழுதி வாங்க, லட்சுமி மூலம் தொடர்பு கொண்ட போது கொலையாளிகள் பிடிபட்டனர். புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிடிபட்ட மூவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.