மலையம்பாக்கம் குளம் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் உத்தரவு
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகா, மலையம்பாக்கம் கிராம குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில், லட்சுமணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பொன்பாலாஜி ஆஜராகி, ''நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து, வீடுகள் கட்டியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றார்.அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, ''வருவாய் ஆவணங்கள் அடிப்படையில், தாசில்தார் ஆய்வு மேற்கொள்வார். ஆக்கிரமிப்பு இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.இருதரப்பு வாதங்களுக்குப் பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் 'குன்றத்துார் தாசில்தாரும், வட்டார வளர்ச்சி அதிகாரியும் இணைந்து, சர்வேயர் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.'ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரிந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும்' என கூறியுள்ளது.