காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மொத்தமுள்ள 51 வார்டுகளில், 33 பேர் தி.மு.க.,வும், எட்டு பேர் அ.தி.மு.க.,வும், எட்டு பேர் சுயேட்சையாகவும், ஒருவர் காங்கிரஸ், ஒருவர் பா.ஜ., சார்பில் வெற்றி பெற்றனர். மேயராக 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மகாலட்சுமியும், 22வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் குமரகுருநாதன் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர். நெருக்கடி
மேயராக பதவியேற்ற மகாலட்சுமிக்கு, ஒராண்டாகவே அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அதிகரித்தது. மாநகராட்சி நிர்வாகத்தில் மேயர் கணவர் யுவராஜ் ஆதிக்கமும் அதிகமானதால், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.இதற்கிடையே, மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் கமிஷன் வரவில்லை என கவுன்சிலர்கள் பலரும் மறைமுகமாக பிரச்னை செய்தனர்.பல பிரச்னைகள் நீடித்து வந்த நிலையில், மாநகராட்சி கூட்டத்திற்கு தி.மு.க.,- - அ.தி.மு.க., - சுயேட்சை கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்காமல் புறக்கணித்து வந்தனர். இதனால், தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல், மேயருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கமிஷனருக்கு கடிதம்
இந்நிலையில்தான், மேயர் மகாலட்சுமி மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., கவுன்சிலர்கள் 17, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 7, பா.ம.க., கவுன்சிலர்கள் 2, காங்., துணை மேயர் குமரகுருநாதன், சுயேட்சைகள் 5, பா.ஜ., ஒருவர் என, 33 பேர் இணைந்து, கலெக்டர் கலைச்செல்வியிடம் கடந்த 7 ம் தேதி இரவு, மனு அளித்தனர்.இதே மனுவின் நகலை, மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகனுக்கும் தபால் மூலம் கவுன்சிலர்கள் அனுப்பி இருக்கின்றனர். ஆனால், கமிஷனர் செந்தில்முருகன், விடுமுறையில் சென்றுவிட்டதால், மாநகராட்சி கூட்டம் எப்போது நடக்கும் என தெரியாமல் கவுன்சிலர்கள் உள்ளனர்.கவுன்சிலர்கள் மனு கொடுத்த விவகாரம் குறித்து, கலெக்டர் கலைச்செல்வியிடம் கேட்டபோது, கவுன்சிலர்கள் கொடுத்த மனுவை, 'மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ளோம். அவர் விடுப்பில் இருக்கிறார். அவர் பணியில் சேர்ந்தவுடன் மாநகராட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். அப்போது தான், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். மாநகராட்சியை பொறுத்தவரையில், கலெக்டரின் நடவடிக்கையை காட்டிலும், கமிஷனரின் நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் பணியில் சேர்ந்தவுடன் மாநகராட்சி கூட்டத்தை நடத்துவார்' என்றார்.இப்பிரச்னை குறித்து காஞ்சிபுரம் தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வராமல், முன்கூட்டியே பேசி இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பார்க்கிறார்கள். ஏற்கனவே சில கவுன்சிலர்களை அழைத்து, மாவட்ட செயலர் சுந்தர் பேச்சு நடத்தியுள்ளார். ஆனால், போதிய சமாதானம் எட்டவில்லை என்பதால், கட்சி மேலிடத்திலிருந்து முக்கிய நிர்வாகிகளை வைத்து, பிரச்னை செய்யும் கவுன்சிலர்களிடம் பேச உள்ளனர். குற்றச்சாட்டு
குறிப்பாக, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் நேரு, அன்பரசன் ஆகியோரில் ஒருவரை வைத்து பேச்சு நடத்த போகிறார்கள். கடந்த வாரமே பேச்சு நடத்தியிருப்பார்கள்.ஆனால், காஞ்சிபுரம் மாநகர செயலர் வீட்டு திருமணம், கோவை முப்பெரும் விழா போன்ற காரணங்களால், பேச்சு தள்ளிப்போனது. மேலிட பேச்சின்போது, மேயரின் கணவர் யுவராஜ் நடந்து கொண்ட விதம், அவரின் செயல்பாடுகள் குறித்து விரிவான குற்றச்சாட்டுகளை தி.மு.க., கவுன்சிலர்கள் முன்வைக்க உள்ளனர்.இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.