ஆக்கிரமிப்பு கடைகள் அட்டகாசம் 108 கூட செல்ல முடியாத அவலம்
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சாலை, ரயில்வே சாலை, செங்கழுநீரோடை வீதி, நெல்லுக்காரத்தெரு, காந்திரோடு என, நகரின் முக்கிய சாலைகளில், வியாபாரிகள் ஆக்கிரமித்து கடையை நடத்துவதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் தினமும் சிரமம் ஏற்படுகிறது.காந்திரோட்டிலிருந்தும், பேருந்து நிலையம் வழியாகவும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான ஆம்புலன்ஸ் செல்கின்றன.அவ்வாறு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் நின்று, நின்று செல்வதால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இதுமட்டுமல்லாமல், கார், இருசக்கர வாகனம் என, எந்த வாகனங்களும் நகருக்குள் விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. எஸ்.வி.என்., பிள்ளைத்தெருவில், புதிதாக முளைத்த காய்கறி கடைகளால், அப்பகுதியே சந்தை போல் காட்சியளிக்கிறது.ஆக்கிரமிப்பு காய்கறி கடைகளால், கச்சபேஸ்வரர் கோவில் சுற்றி வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் அவர்களை அழைத்து செல்லும் பெற்றோரும் சிரமப்படுகின்றனர்.'மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்துவதால், சாலையில் தான் கடைகளை நடத்துவோம்' என, வாகன ஓட்டிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம் செய்கின்றனர்.மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை இணைந்து, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளைஉடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.