ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
காஞ்சிபுரம்,: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி, சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஏழாவது வார்ஷிக ஆராதனை மஹோத்சவம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நாளை நடைபெறுகிறது.இதையொட்டி, நேற்று காலை, வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீதாஞ்சலி உள்ளிட்டவை நடந்தது.ஜயேந்திரரின் வார்ஷிக ஆராதனை மஹோத்சவ தினமான, நாளை, காலை 7:00 மணிக்கு ஸ்ரீருத்ர பாராயணம், ஹோமம், மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹூதியும், சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது.காலை 9:00 மணி முதல், பஞ்சரத்ன கீர்த்தனை, கோஷ்டி கான நாத சமர்ப்பணம் உள்ளிட்டவை நடக்கிறது. வார்ஷிக ஆராதனை மஹோத்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் சங்கர மடம் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், சங்கர மடத்தில், நாளை காலை, ஸ்ரீபெரியவா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பதாகை கண்காட்சியும், மதியம் கச்சபேஸ்வரர் கோவில் அருகிலும், ஏனாத்துார் கோதண்டராமர் பஜனை கோவில் அருகிலும் அன்னபிரசாதம் வழங்கப்பட உள்ளது. மாலை தங்க ரத பவனி நடைபெறுகிறது.ஏனாத்துார் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நாளை மறுநாள் மஹா சுவாமிகள் கலையரங்கில், மரபிசை பயிலரங்கம் மற்றும் கையேடு வெளியீட்டு விழா நடைபெறுகிறது.பரத்வாஜர் கருத்தரங்க அறையில் கிராமப்புற தொழில் முனைவோருக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.