காஞ்சி அரசு மருத்துவமனையின் செயல்பாடு குறித்து எம்.எல்.ஏ., அதிருப்தி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பொது மருத்துவம், குழந்தைகள், கண், காது, சிறுநீரகம், மகப்பேறு, எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மகப்பேறு மருத்துவ பிரிவில் போதிய அளவில் படுக்கை வசதி இல்லாததால் பிரசவித்த தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடப்பதாக புகார்கள் எழுந்தன.இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், நேற்று, மாலை 3:00 மணிக்கு அரசு மருத்துவமனையில், ஐந்து மாடிகளுடன் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணி ஒருவர் மகப்பேறு வார்டு அருகில், கேட்பாரற்று படுத்து கிடந்தார். அவரிடம் விசாரித்த எம்.எல்.ஏ., எழிலரசன், உடனடியாக பணியில் இருந்த மருத்துவரையும் செவிலியர்களையும் அழைத்து படுத்துக்கிடந்த பெண்மணிக்கு பிரசவம் பார்க்க அறிவுறுத்தினார்.தொடர்ந்து, மகப்பேறு கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் பிரசவித்த தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளோடு படுக்கை வசதி இல்லாமல் 20க்கும் மேற்பட்டோர் தரையில் படுத்து கிடப்பதை கண்டார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ., எழிலரசன், மருத்துவமனை அதிகாரிகளை அழைத்து, உடனடியாக படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் இரண்டாவது மாடியில், உடனடியாக 50 படுக்கையை ஏற்பாடு செய்தனர். இதையடுத்து தரையில் பச்சிளங்குழந்தையுடன் படுத்திருந்த தாய்மார்களுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டது.இதை தொடர்ந்து மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசிய எம்.எல்.ஏ., எழிலரசன், மருத்துவமனையின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தார். இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் எச்சரித்தார்.