பட்டா மேல்முறையீடு மனுதாரர்கள் அலைக்கழிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் பட்டாக்களிலும், பதிவு செய்யப்பட்ட பத்திரங்களுக்கு வழங்கப்படும் பட்டாக்களிலும் பல்வேறு பிழைகள் ஏற்படுகின்றன. சர்வே எண், பட்டாதாரர் பெயர், நிலத்தின் அளவு போன்றவற்றில் பிழை ஏற்படுகிறது. அதேபோல, நில உடமை மேம்பாட்டு திட்டத்தில் வழங்கப்பட்ட பட்டாக்களிலும் உரிமையாளர் விபரங்களில் பல்வேறு பிழைகள் ஏற்பட்டுள்ளன.இவற்றை வருவாய் துறை ஆவணங்களில் திருத்தி, சரியான பயனாளிக்கு பட்டா வழங்க, துறை ரீதியான விசாரணை செய்து, வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உத்தரவிட வேண்டும்.ஆனால், பட்டா திருத்தம் தொடர்பாக, மேல்முறையீட்டு மனுக்கள் வழங்கிய விண்ணப்பதாரர்கள் ஆண்டுக்கணக்கில் அலைவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்தபடியே உள்ளது.நிலத்தை அளக்க சர்வேயரிடமும், மனுவை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்ய தாலுகா அலுவலகத்திற்கும் அலைய வேண்டியிருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.அவ்வாறு அலைந்தாலும், வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள் சரியான பதிலும் தெரிவிக்காமல் அலட்சியமாக நடப்பது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கதையாக உள்ளது.வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், அமைச்சர் குறைதீர் கூட்டம், ஜமாபந்தி முகாம் என, பல வகையான முகாம்களில், விண்ணப்பதாரர்கள் மனு அளித்தபடி உள்ளனர்.ஆனால், துரித நடவடிக்கை இல்லை. எனவே, பட்டா மேல்முறையீட்டு மனுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.