பட்டா மாற்றம் செய்ய மனு
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது. இதில், பட்டா, உதவித்தொகை பட்டா திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 622 பேர் மனு வழங்கினர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், உத்திரமேரூர் பகுதியில் புதிய சர்ச் திறக்க கோரி, இந்திய சுவிசேஷ திருச்சபையினர் மனு அளித்தனர். அதேபோல், ஓரிக்கை, கண்ணகிபுரம் கிராமவாசிகள் பட்டா மாற்றம் செய்து கொடுக்க கோரி, நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.அப்பகுதிவாசிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:புல எண்- 19/1ல் நுற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 40 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால், தற்போது வரை வீட்டுமனை பட்டா மாற்றம் செய்து கொடுக்கவில்லை. காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் புறம்போக்கு நிலங்களுக்கு, நத்தம் புறம்போக்கு நிலமாக மாற்றம் செய்து, அரசு பட்டா வழங்கி வருகிறது. நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கும், பட்டா மாற்றம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.