| ADDED : ஜூலை 08, 2024 05:21 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.இக்கூட்டத்திற்கு வரும் பயனாளிகள், தாங்களாகவே கைப்பட மனு எழுதி கொண்டு வருகின்றனர். சிலர், கம்ப்யூட்டர் மையங்களில் தனக்கான கோரிக்கை மனுவை கம்ப்யூட்டரில் எழுதி பிரின்ட் எடுத்து வருகின்றனர்.ஆனால், எழுத, படிக்க தெரியாத சிலர், கலெக்டர் அலுவலகத்தில் எழுதி கொடுக்கும் இலவச மனுவை நம்பி வருகின்றனர்.அவ்வாறு வருவோருக்கு, இலவசமாக மனு எழுதி பெற நீண்ட நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இலவசமாக மனு எழுதி தர, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், கலெக்டர் வளாகத்தில் ஏற்கனவே ஐந்து பேர் அமர்ந்து பணியாற்றுகின்றனர்.இருப்பினும், கூடுதல் ஊழியர்கள் இலவசமாக மனு எழுதி தர பணியமர்த்த வேண்டும் என, மனு அளிக்க வருவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.