உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அறுவை சிகிச்சையில் நடந்த குளறுபடிகள் பி.பி.ஜெயின் மருத்துவமனையை மூட உத்தரவு 

அறுவை சிகிச்சையில் நடந்த குளறுபடிகள் பி.பி.ஜெயின் மருத்துவமனையை மூட உத்தரவு 

சென்னை:அறுவை சிகிச்சைக்கு உயர்தர மருத்துவ உபகரணங்கள் இல்லாத பி.பி.ஜெயின் மருத்துவமனையை மூட, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் 26 என்பவர், 146 கிலோ எடையுடன் அவதிப்பட்டு வந்தார். ரேலா மருத்துவமனையில் டாக்டர் பெருங்கோவிடம் உடல் பருமன் குறைப்பு சிகிச்சை பெற்றார்.டாக்டரின் பரிந்துரைப்படி, பம்மலில் உள்ள பி.பி.ஜெயின் மருத்துவமனையில் உடல்பருமன் அறுவை சிகிச்சை செய்வதற்கு, ஏப்., 21ம் தேதி உள்நோயாளியாக ஹேமச்சந்திரன் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது, இதயத்துடிப்பு நின்றது. அங்கு எக்மோ என்ற உயிர் காக்கும் கருவிகள் இல்லாததால், அங்கிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக, ரேலா மருத்துவமனையில் ஹேமச்சந்திரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர், 22ம் தேதி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், இணை இயக்குனர்கள் தலைமையில் கமிட்டி அமைத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தவறுகள் கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்ட ஆய்வறிக்கை:அறுவை சிகிச்சைக்கு முன், நோயாளியின் பெற்றோரிடம் முறையாக ஒப்புதல் படிவம் பெறப்படவில்லை. தகுதியில்லா நர்ஸ்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின்போது, தீவிர சிகிச்சை டாக்டர்கள் இல்லாததும், மருத்துவமனையில் உயர்தர மருத்துவ உபகரணங்கள் இல்லாததும் உயிரிழப்புக்கு காரணம். எனவே, தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997ன்படி, பம்மல் பி.பி.ஜெயின் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி சான்றிதழை தற்காலிகமாக நீக்கம் செய்தும், மருத்துவமனையை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், நோயாளிக்கு மருத்துவ வசதி குறைந்த மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன், பின் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அவற்றை சரி செய்வதற்கான டாக்டர்கள் இல்லாத இடத்தில் வைத்து, அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பெருங்கோ மற்றும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ