விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்கிய கஞ்சா ஆசாமிகள் மூன்று பேர் கைது
சென்னை, : ஓ.எம்.ஆர்., கண்ணகி நகரில் நேற்று முன்தினம், கஞ்சா வியாபாரி மற்றும் கஞ்சா போதையில் இருந்த இருவர் என, மூன்று பேர் அங்குள்ள மக்களை மிரட்டி, ரகளையில் ஈடுபட்டனர். தகவலறிந்து, கண்ணகி நகர் காவல் நிலைய தலைமை காவலர்கள் புஷ்பராஜ், சிலம்பரசன் ஆகியோர் அங்கு சென்றனர்.அவர்களிடம், கஞ்சா வியாபாரியான ராகுல்சிக்கினார். அவர், போலீஸ்காரர் புஷ்பராஜின் கையை கடித்து, தப்பி செல்ல முயன்றார். அதேநேரம், ராகுலை விட கூறி, போதையில் இருந்த பிரேம் என்ற வாலிபர், கத்தியால் போலீசாரை மிரட்டி, தன்னை தானே நெஞ்சில் கத்தியால் கிழித்து கொண்டார். சந்தோஷ்குமார், போலீஸ்காரர்கள் மீது கல் வீசி தாக்க துவங்கினார்.அவர்களிடம் இருந்து, அப்பகுதி மக்கள் போலீசாரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். கஞ்சா போதை நபர்களால் போலீசார் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்த கண்ணகி நகர் போலீசார், ராகுல், 23, பிரேம், 23, சந்தோஷ்குமார், 23, ஆகிய மூவரையும் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இது குறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:கண்ணகி நகர், எழில் நகரில் 10க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் உள்ளனர். இவர்களால் பள்ளி மாணவர்கள், வாலிபர்கள் வாழ்க்கை பாழாகிறது. போலீசில் புகார் அளித்தால், எங்கள் வீடு புகுந்து கஞ்சா வியாபாரிகளின் கும்பல் தாக்குதல் நடத்துகின்றனர்.நாளுக்கு நாள் அவர்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. போலீசாரை தாக்கும் அளவுக்கு தைரியமாக வலம் வருகின்றனர். சிலர் குடும்பமாகவே இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.கண்ணகி நகரை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளாக கஞ்சா, போதை மாத்திரை விற்பனை அதிகரித்து வருகிறது. போதையில் நடமாடும் வாலிபர்கள், சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இவர்களால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தினசரி சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் வைத்து, போலீசார் சிறப்பு குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினார்.