உத்திரமேரூர் நீதிமன்றத்திற்கு ரூ.102 கோடியில் சொந்த கட்டடம்
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் உள்ள எண்டத்தூர் சாலையில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் இல்லாமல், 25 ஆண்டுகளாக, வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் கட்ட, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். சில ஆண்டுக்கு முன் நீதிமன்றம் கட்டுவதற்கு வேடபாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்து வந்தது.தற்போது, 2024 -- - 25 நிதி ஆண்டில், மத்திய அரசின் நீதித்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் திட்டத்தின் கீழ், 102.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, புதிய நீதிமன்றம் கட்டப்பட உள்ள இடத்தில், பொதுப்பணித்துறையினர் தூய்மைப்படுத்தி, கட்டடம் கட்டுவதற்கான அளவீடுகளை குறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.