மேலும் செய்திகள்
பாதாள சாக்கடை பணிகளால் காஞ்சியில் சாலைகள் சேதம்
23-Jul-2025
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து வரும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் படுமோசமான நிலையில் உள்ளன. பருவமழைக்கு முன், இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என, ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியின் விரிவாக்க பகுதியாக ஓரிக்கை, செவிலிமேடு, திருக்காலிமேடு ஆகியவை சேர்க்கப்பட்டன. மாநகராட்சியுடன், விரிவாக்க பகுதிகளுக்கும் சேர்த்து 254 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் 51 வார்டுகளில் முதற்கட்டமாக 11 வார்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தும் பணி நடக்கிறது. அதிலுள்ள 100க்கும் மேற்பட்ட தெருக்களில், 180 கி.மீ., துாரத்திற்கு குழாய் புதைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கழிவுநீர் செல்ல, தெருக்களின் நடுவே பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அதன் பின் சாலையை சீரமைக்காததால், பெரிய பள்ளங்கள் ஏற்படுவதோடு, சேறும் சகதியுமாக சாலைகள் மாறியுள்ளன. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் 100க்கும் மேற்பட்ட தெருக்களிலும் இந்த நிலையே உள்ளது. தவிர, சாலையின் நடுவே, 'மேன்ஹோல்' எனும் இயந்திர நுழைவு தொட்டிகள் அமையும் இடங்களிலும், சாலை படுமோசமாக மாறியுள்ளன. இதனால், குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடிவதில்லை. மழை பெய்தால் சாலையின் நிலை முழுதும் சகதியாக மாறிவிடுவதால், நகர் மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில சமயம், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்திலும் சிக்கி காயமடைகின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் திட்டத்திற்கு குழாய் புதைப்பு பணி நடக்கும் இடங்களில் வசிப்போர், அந்தந்த பகுதி கவுன்சிலர்களிடம், சாலையின் நிலை குறித்தும், உடனே சீரமைக்க கோரியும் அழுத்தம் தருகின்றனர். இந்த பிரச்னை, மாநகராட்சி கூட்டத்திலும் எதிரொலித்தது. வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்க உள்ளது. மழைக்காலத்தில் இந்த சேதமான சாலைகள் மேலும் மோசமாகும். அதனால், பருவமழைக்கு முன்னதாக, சாலை சீரமைக்க வேண்டும் என, செவிலிமேடு, ஓரிக்கை, திருக்காலிமேடு போன்ற பகுதிமக்கள் குரல் கொடுத்தனர். இந்நிலையில், குழாய் பதிப்பு பணி நடந்த 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையை சீரமைக்க, நகராட்சி நிர்வாக துறை, முதற்கட்டமாக 6.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, பணிகள் துவங்கியுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி கூறியதாவது: காஞ்சிபுரம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்ட பணி வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓரிக்கை, செவிலிமேடு போன்ற இடங்களில், பணி முழுமையாக முடிந்த இடங்களில், முன்னுரிமை அடிப்படையில் சாலை மீண்டும் அமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்துடன் குடிநீர் பணிகளும் நடப்பதால், அவற்றுடன் சேர்த்து, புதிய சாலை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் எங்கள் பகுதியில், சாலைகள் படுமோசமாக உள்ளன. இருசக்கர வாகனத்தில் செல்லவோ, நடந்து செல்லவோ கூட முடியாத நிலை உள்ளது. பருவமழை துவங்கும் முன்னதாக, சாலையை விரைவாக அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - எஸ்.வி.சங்கர், செவிலிமேடு, காஞ்சிபுரம்.
23-Jul-2025