2 டி.எம்.சி., எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி
குன்றத்துார்:சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி, 3.645 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், பூண்டி ஏரியின் இணைப்பு கால்வாய் வழியே, செம்பரம்பாக்கம் ஏரிக்கு, இரண்டு மாதமாக வருகிறது.மேலும், ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில், அவ்வபோது பெய்யும் கனமழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கிறது. இதனால், ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வந்தது.கடந்த வாரம், 1.37 டி.எம்.சி., கொள்ளவு இருந்தது. நேற்று ஏரியின் கொள்ளளவு, 2 டி.எம்.சியை எட்டியது. நீர் மட்டம் ஆழம், 17.41 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு, 400 கன அடியாகவும் உள்ளது. குடிநீர் மற்றும் பிறதேவைக்கு ஏரியில் இருந்து, 134 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.